ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. லக்னௌவில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதையும் படிக்க: பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை அணிக்கான எச்சரிக்கை: ரிக்கல்டான்
முப்படை தளபதிகளுக்கு அழைப்பு
ஐபிஎல் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறவுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் தேவ்ஜித் சாய்கியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இந்திய ஆயுதப் படைகளின் தளபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அகமதாபாதில் நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆயுதப் படைகளின் வீரம், தைரியம் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு பிசிசிஐ சல்யூட் செய்கிறது.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஐபிஎல் நிறைவு விழாவில், நமது ஹீரோக்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். நாட்டில் கிரிக்கெட் அதீதமாக நேசிக்கப்பட்டாலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பைவிட வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. அதில், பல்வேறு பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிக்க: சச்சினின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
பாகிஸ்தான் சார்பில் தாக்குதலை நிறுத்த வேண்டுகோள் வைக்கப்பட்டதையடுத்து, தாக்குதலை கைவிட இந்தியா ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.