பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதாா் சரிபாா்ப்பு - வரைவு மசோதா பிரிவுகள...
கோலி - ஜிதேஷ் அதிரடி: 228 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த ஆர்சிபி! குவாலிஃபையர் 1-க்கு தகுதி!
லக்னௌவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குவாலிஃபையர் 1 க்கு தகுதி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி மற்றும் 70-வது போட்டி உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ எக்கானா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பொறுப்பு கேப்டன் ஜிதேஷ் சர்மா முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய லக்னௌ அணியின் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரிஷப் பந்த் 61 பந்துகளில் 118 ரன்களும்(11 பவுண்டரி, 8 சிக்ஸர்), மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 67 ரன்களும்(4 பவுண்டரி, 5 சிக்ஸர்), பிரீட்ஸ்கி 14 ரன்களும், நிக்லோஸ் பூரன் 13 ரன்களும் எடுத்தனர். லக்னௌ அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணித் தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர், ரொமாரியோ ஷெபர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் - விராட் கோலி இருவரும் அருமையான தொடக்கம் அளித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில், பிலிப் சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்குப் பின்னர் வந்த கேப்டன் ரஜத் படிதார் 14 ரன்னில் ஆட்டமிழக்க, லியாம் லிவிங்ஸ்டன் ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி இந்தத் தொடரில் 8 வது அரைசதத்தைக் கடந்த விராட் கோலி 30 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
விராட் கோலியின் விக்கெட்டுக்குப் பின்னர் பரிதாபமான நிலையில் இருந்த ஆர்சிபி அணியை மயாங் அகர்வால் மற்றும் பொறுப்பு கேப்டன் ஜிதேஷ் சர்மா இருவரும் இணைந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
தான் சந்தித்த அனைத்துப் பந்துகளையும் சிதறடித்த ஜிதேஷ் சர்மா அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். வில் ஓரூக் வீசிய 18 ஓவரில் சிறப்பாக விளையாடிய ஜிதேஷ் 21 ரன்கள் விளாசி வெற்றியைத் தங்கள் அணி பக்கம் கொண்டு வந்தார். இறுதியில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார் ஜிதேஷ் சர்மா. மேலும், அவர் 33 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 85 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குவித்து இமாலய வெற்றிபெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து ஆர்சிபி குவாலிஃபையர் 1க்கு தகுதி பெற்றது.