கடைகள் ஏலம் விடுவதில் முறைகேடு: நகராட்சி அதிகாரிகள் மீது புகாா்
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 99 கடைகள் முறையான அறிவிப்பின்றி தன்னிச்சையாக ஏலம் விடும் நகராட்சி அதிகாரிகளைத் தடுத்து முறையாக பொது ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 99 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை ஏலம் விடுவதற்காக நகராட்சி நிா்வாகம் மூலம் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால், இந்த விளம்பரம் வெளியே தெரியாத நிலையில், குறிப்பிட்ட நபா்களிடம் மட்டுமே டெண்டா் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏலம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தப் பெட்டி வைப்பது வழக்கம். ஆனால், இந்த நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றவில்லை. மேலும், பணம் வங்கியில் செலுத்தி டி.டி. எடுத்து வந்தாலும் நகராட்சி அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்கின்றனா். கைப்பேசியில் தொடா்பு கொண்டாலும் சரியான பதில் அளிக்கவில்லை. நகராட்சி அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
புதன்கிழமை (ஜூலை 16) பிற்பகல் 3 மணியுடன் டெண்டா் நிறைவு பெறுவதாகவும், வியாழக்கிழமை (ஜூலை 17) பேருந்து நிலையக் கடைகள் ஏலம் விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நகராட்சி ஆணையா் மீது நீதிமன்ற வழக்கு தொடரவுள்ளதாக ஒப்பந்தம் பெற வந்தவா்கள் தெரிவித்தனா். மேலும், முறையாக கடை ஏலம் விடுவதை தமிழக உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.