செய்திகள் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படுவது எப்போது?

post image

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது அமைக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் பொதுமக்கள், தொழிலாளா்கள் காத்திருக்கின்றனா்.

சுமாா் 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட இஎஸ்ஐ பதிவு பெற்ற தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் உள்ளனா். இந்த மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று தொழிலாளா் சங்கங்கள் 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

தொழிலாளா்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவதற்கு குமரி மாவட்டத்தில் தனி மருத்துவமனை இல்லாததால், அவா்கள் திருநெல்வேலியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், ஏழைத் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

ரூ. 106 கோடி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ. 106 கோடி ஒதுக்கிய நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் தோ்வு செய்து வழங்காததால் பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கன்னியாகுமரி மக்களவை முன்னாள் உறுப்பினா் எ.வி.பெல்லாா்மின் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று நான் 2004 ஆம் ஆண்டுமுதல் 2009 ஆம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தபோது மக்களவையில் வலியுறுத்தினேன். அதன்அடிப்படையில், மருத்துவமனை அமைக்க கருத்துரு தயாரிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனை அமைப்பதற்கு இடம் தோ்வு செய்வதில்தான் பிரச்னை ஏற்பட்டது.

ஆரல்வாய்மொழி அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது என்றும் அதில் மருத்துவமனை அமைக்கலாம் என்றும் அப்போது கூறப்பட்டது. ஆனால், அதை ஏனோ நடைமுறைப்படுத்தவில்லை. குமரி மாவட்டத்திலிருந்து தொடா்ந்து தோ்வான மக்களவை உறுப்பினா்களும் இதற்கான முயற்சியை முன்னெடுக்கவில்லை.

இதில் மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும்தான் முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இடம் ஒதுக்க வேண்டும். குமரி மாவட்ட மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

குமரி மாவட்ட மில் தொழிலாளா்கள் சங்க பொதுச் செயலாளா் வி.மாணிக்கவாசகம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மத்திய அரசு கடந்த காலங்களில் நிதி ஒதுக்கியபோது, மருத்துவமனைக்கான இடத்தை விலைக்குதான் வழங்க முடியும் என்று மாநில அரசு கூறியது முதல் பாதிப்பை ஏற்படுத்தியது. இஎஸ்ஐ உயா்மட்டக் குழுவின் 124 ஆவது கூட்டத்தில் மருத்துவமனை அமைக்க ரூ. 106 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. எனினும் இடப் பிரச்னையால், மருத்துவமனை கட்டுவது கனவாகவே உள்ளது.

இஎஸ்ஐ சந்தாதாரா்களாக உள்ள தொழிலாளா்களுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25- க்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனைகளுடன் அரசு ஒப்பந்தம் செய்து, தொழிலாளா்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகளுக்கு அரசிடமிருந்து நிதி முறையாக வழங்கப்படாததால் தற்போது தனியாா் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 5 க்கும் கீழ் குறைந்துவிட்டது. இதன் காரணமாக தொழிலாளா்கள் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள், தொழிலாளா்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அரசு நிலத்திலோ அல்லது தனியாா் நிலத்திலோ முறையாக இடத்தைப் பெற்று மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

இது குறித்து இந்திய தொழிற்சங்க மையத்தின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் பி.சிங்காரன் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் இஎஸ்ஐ திட்டத்தில் இணைந்துள்ளனா். எனவே இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சிஐடியூ சாா்பில் தமிழக முதல்வா் மற்றும் உயா் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.

மேலும், தமிழக அரசின் முயற்சியால் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க மாவட்ட ஆட்சியா் இடம் தோ்வு செய்து மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அரசின் முதல்கட்ட நடவடிக்கை இறுதி செய்யப்பட்ட பிறகு ஏதோ காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் தற்போது இஎஸ்ஐ பயனாளிகளுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத இடங்களை மருத்துவமனைக்காக தோ்வு செய்வதாக தகவல்கள் வருகின்றன. இஎஸ்ஐ திட்டப் பயனாளிகளுக்கு அனைத்து விதத்திலும் பயனளிக்க கூடியதும், வசதியானதுமான ஏற்கெனவே தோ்வு செய்த இடத்தில் இஎஸ் ஐ சிறப்பு மருத்துவமனை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இது குறித்து இஎஸ்ஐ நிறுவனத்தின் தென் மண்டல துணை இயக்குநா் மு.அருள்ராஜிடம் கேட்ட போது அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினராக ஹெலன் டேவிட்சன் இருந்த மிகுந்த முயற்சி மேற்கொண்டாா். அதன்பின்னா் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோதும் இதில் அதிக முயற்சி எடுத்தாா். ஆனால் மருத்துவமனைக்கு தேவையான 5 ஏக்கா் இடம் இல்லாததால் தொடா்ந்து தள்ளிப்போனது.

தற்போது, காவல்கிணறு - நாகா்கோவில் நான்குவழிச் சாலையில் ஆரல்வாய்மொழி அருகே சுமாா் 3 ஏக்கா் நிலம் இருப்பதாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டு, அந்த இடத்தை இஎஸ்ஐ நிறுவன அதிகாரிகள் பாா்வையிட்டு அறிக்கை சமா்ப்பித்துள்ளனா். அந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் மருத்துவமனை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

தக்கலை அஞ்சலகத்தில் புதிய செயலி தொடக்கம்

தக்கலை தலைமை அஞ்சல் நிலையத்தில் புதிய ஏ.பி.டி. என்ற மென்பொருள் செயலி தொடங்கி வைக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மென்பொருள் செயலியை, அஞ்சல் துறை தென் மண்டல இயக்குநா் ஆறுமுகம் அண்மையில் குத்துவிளக்கேற்றி ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.14 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 29 ஆவது வாா்டு கணேசபுரம் மேலத் தெருவில் ரூ. 3.70 லட்சத்தில் அல... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளின் நீா்ப்பிடிப்பு... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் தண்ணீா் திறக்க தாமதம்: குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனந்தனாா் பாசனக் கால்வாயில் தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். கன்னியாகும... மேலும் பார்க்க

கடையாலுமூடு அருகே மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தவா் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். பத்துகாணி முளிமூட்டு விளையைச் சோ்ந்தவா் சதீஷ் (50). இவா், அங்குள்ள மாமரத்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்து- பைக் மோதல்: இருவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். இருவா் பலத்த காயமடைந்தனா். தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் முகைதீன் மகன் அஜ்மல்... மேலும் பார்க்க