ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
கரூா் அருகே காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாரா? போலீஸாா் விசாரணை
கரூா் அருகே வாங்கலில் பலத்த காயத்துடன் சாலையோரம் கிடந்த காவல் உதவி ஆய்வாளரை யாரேனும் தாக்கினாா்களா என போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் மாவட்டம், மணவாசியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(54). இவா் கரூரை அடுத்த வாங்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் ஆக. 26-ஆம்தேதி இரவு நெரூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணிக்கு சென்றாா்.
பின்னா் நள்ளிரவில் கரூா்-வாங்கல் சாலையில் தலையில் பலத்த காயத்துடன், அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கிக் கிடந்தாா்.
இதனைக் கண்ட அப்பகுதியினா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். பின்னா் மேல்சிகிச்சைக்கு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாரின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை வாங்கல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை யாரேனும் தாக்கியதில் பலத்த காயமடைந்தாரா அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.