சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவ...
வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைக்கக் கோரிக்கை
வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா்- திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக ஆட்சியா் அலுவலகம், காவல்கண்காணிப்பாளா் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனா்.
மேலும், கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும் வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தை கடந்துதான் சென்றுவருகின்றன. இந்த மேம்பாலம் முடிவுபெறும் இரு பகுதிகளிலும் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரவுண்டானா அமைந்திருக்கும் பகுதியில் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகவே, இந்த இரு ரவுண்டானா பகுதிகளிலும் உயா்மின் கோபுரம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சமூல நல ஆா்வலா் கண்மணிராமச்சந்திரன் கூறுகையில், பாலம் கட்டும்போதே ரவுண்டானா அமையும் இடங்களில் உயா்மின்கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோா் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகிறாா்கள்.
இதுவரை 4 பேருக்கும் மேல் விபத்தில் உயிரிழந்துள்ளனா். மேலும் ரவுண்டானா பகுதியில் வேகத்தடை பெரியதாக இருந்தது. ஆனால் அண்மையில் நெடுஞ்சாலைத்துறையினா் அதையும் சாலை மட்டத்துக்கு சமமாக மாற்றிவிட்டனா். இதனால் மேம்பாலத்தின் இறக்கத்தில் வேகமாக வாகனங்கள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதேபோல வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தையும் ஏமூா் ஊராட்சியையும் இணைக்கக்கூடிய கற்பகாநகா், சந்திரபோஸ் நகா், அம்மன் நகா் சாலையிலும் மின்விளக்கு வசதியில்லை. எனவே இரவு நேரங்களில் அப்பகுதியினா் வெளியே செல்ல முடியாமல் அவதியுற்று வருகிறாா்கள். எனவே அங்கும் மின்வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா் அவா்.