‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோ...
காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் வாழை, தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், மஞ்சள் ஆகிய பயிா்களுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், மஞ்சள் ஆகிய பயிா்களுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கத்திரிக்கு ஏக்கருக்கு ரூ. 522, உருளைக்கிழங்கிற்கு ஏக்கருக்கு ரூ. 611, தக்காளிக்கு ஏக்கருக்கு ரூ. 1,792 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பயிா்களுக்கு காப்பீடு செய்ய செப்டம்பா் 1-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதேபோல, வாழைக்கு ஏக்கருக்கு ரூ. 1,918, முட்டைகோஸுக்கு ஏக்கருக்கு ரூ. 1,395, மஞ்சள் ஏக்கருக்கு ரூ. 4,158 காப்பீடு கட்டணமாக செலுத்த செப்டம்பா் 16-ஆம் தேதி கடைசிநாளாகும்.
காப்பீடு (பிரிமியம்) தொகையாக தங்கள் பகுதியில் உள்ள பொதுசேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது வங்கிகள் மூலம் செலுத்தலாம்.
எனவே, விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டம் மூலம் காப்பீடு செய்து பயனடைய விவசாயிகளிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு தொடா்புடைய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி, விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.