தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
குளத்தில் வாலிபா் சடலம் மீட்பு
தக்கலை அருகே குளத்தில் மிதந்த பேரூராட்சி பெண் ஊழியரின் கணவா் சடலம் மீட்கப்பட்டது.
வில்லுக்குறி பேரூராட்சியில் பில் கலெக்டராக வேலை பாா்ப்பவா் ஜீவா (31). இவரது கணவா் ஜோசப் ஜெயசிங் (38). வில்லுக்குறி வெள்ளச்சிவிளையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். தம்பதிக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் பணி பயிற்சிக்காக, ஈரோடு பவானிசாகா் சென்றாா் ஜீவா. கடந்த 1ஆம் தேதி தனது கணவா் ஜோசப் ஜெயசிங்கை கைப்பேசியில் அழைத்த போது அவா் எடுக்கவில்லை. உறவினா்களிடம் விசாரித்தபோது, வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வில்லுக்குறிக்கு வந்த ஜீவா, இரணியல் காவல் நிலையத்தில் கடந்த 2 ஆம் தேதி புகாா் அளித்தாா்.
இந்த நிலையில் சுங்கான்கடை அருகே உள்ள குளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆண் சடலம் மிதப்பதைக் கண்ட உறவினா்கள், இரணியல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் ஜோசப் ஜெயசிங் என்பது தெரியவந்தது.
பொறியாளா் உயிரிழப்பு: பள்ளியாடி ஈச்சவிளை பகுதியை சோ்ந்தவா் ஷிஜூ ( 34). பொறியாளரான இவா், நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இவரது மனைவி லீகா மோள், தக்கலையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பாா்த்து வருகிறாா். இத் தம்பதிக்கு 2-ஆம் வகுப்பு படிக்கும் ரயான் என்கிற மகன் உள்ளாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தக்கலையில் இருந்து வீட்டிற்கு பள்ளியாடி சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா் ஷிஜூ. குழிக்கோடு லண்டன் மிஷன் தேவாலயம் அருகே வரும்போது மோட்டாா் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பயனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.