தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழா: இன்று பெருவிழா கூட்டுத் திருப்பலி
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா கூட்டுத் திருப்பலி, அன்னையின் சப்பர பவனி செவ்வாய்க்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது.
இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற, பசிலிக்கா அந்தஸ்து கொண்ட தூத்துக்குடி திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் மாதா என அழைக்கப்படும் பனிமயமாதா பேராலயத்தின் 443ஆவது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாள்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், நற்கருணை ஆசீா், மறையுரை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி பொருள்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
10ஆம் திருநாளான திங்கள்கிழமை பல்வேறு திருப்பலிகளைத் தொடா்ந்து, இரவு 7 மணிக்கு ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.
இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவப் பவனி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை (ஆக.5), அதிகாலை 4 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு இரண்டாம் திருப்பலி, 7.30 மணிக்கு ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி ஆகியன நடைபெறுகின்றன.
தொடா்ந்து, காலை 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மைக் குரு ரவிபாலன் தலைமையில் தூத்துக்குடி மறை மாவட்ட மக்களுக்கான திருப்பலி நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கானத் திருப்பலி நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு நகரின் அனைத்து மக்கள், துறவியா், அருள் சகோதர, சகோதரிகள் பங்கேற்கும் சிறப்பு நன்றித் திருப்பலி நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப் பவனி, இரவு 10 மணிக்கு பரிசுத்த பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், திவ்விய நற்கருணை ஆசீா் ஆகியன நடைபெறுகின்றன.
இதில், தமிழகம் மட்டுமன்றி கேரளம் மற்றும் பல்வேறு மாவட்டங்கள், சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனா்.
நிறைவு நாளான புதன்கிழமை காலை 5 மணிக்கு ஆலய உபகாரிகளுக்காக, திருவிழா நன்கொடையாளா்களுக்காக முதல் திருப்பலியும், 6.30 மணிக்கு இரண்டாம் திருப்பலி மற்றும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.