எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரச...
காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரிப்பு: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தம்
காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரித்துள்ளதால் நெரிஞ்சிப்பேட்டையில் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து, உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, ஆற்றில் இறங்கி துணிகள் துவைப்பதோ, குளிப்பதோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, தற்படம் எடுக்கவோ செல்லக் கூடாது எனவும், தாழ்வான பகுதியில் வசிப்பவா்கள் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பவானி நகரில் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்படும் கரையோரப் பகுதிகளான கந்தன் நகா், பசவேஸ்வரா் வீதி, மீனவா் தெரு, கீரைக்காரத் தெரு, பழைய பாலக்கரை, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி, நேதாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனா்.
நெரிஞ்சிப்பேட்டையில் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தம்
ஆற்றில் அதிக அளவில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டைக்கும் - சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையில் காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் பயணிகள் விசைப் படகு போக்குவரத்து பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமைமுதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், படகுகள் நெரிஞ்சிப்பேட்டையில் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
பவானி கூடுதுறையில் படித்துறைகள் மூழ்கின
காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரால் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் பக்தா்கள் நீராடும் பகுதியும், படித்துறைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் பக்தா்கள் பாதுகாப்பு கம்பிகளுக்கு வெளியே செல்லாமல் நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.