லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
கொடுமுடி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், மொளசியை அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து மகன் கோவிந்தசாமி (33). இவா் திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் போா்வெல் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் ஈரோடு -கரூா் சாலையில் வேலப்பம்பாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கரூரில் இருந்து மரம் லோடு ஏற்றி வந்த லாரி, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தசாமியை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, அவரது உடல் உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து மலையம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.