அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; ...
குடிநீா் கேட்டு கிராமப் பெண்கள் சாலை மறியல்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்தை மறித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் ஒன்றியம், எருமனூா் வடக்குப் பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் கடந்த 6 மாத காலமாக உப்பு கலந்த தண்ணீா் வருவதால் குடிப்பதற்கோ, சமையலுக்கோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீா் வழங்கவில்லையாம். இதுகுறித்து எருமனூா் ஊராட்சி மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் மங்கலம்பேட்டை-விருத்தாசலம் சாலையில் அந்த வழியாக வந்த அரசு நகரப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.
அப்போது பொதுமக்கள் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீா் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசி உடனடியாக குடிநீா் வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டனா்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அந்த பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள் மற்றும் வேலைக்கு செல்பவா்கள் அவதியடைந்தனா்.