'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள கோபுராபுரம் கிராமத்தில் குடிநீா் பிரச்னையைத் தீா்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோபுராபுரம் கிராமத்தில் சுமாா் 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள 50 குடும்பங்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் இல்லையாம். இது தொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வியாழக்கிழமை காலை காலிக் குடங்களுடன் பாலக்கொள்ளை - விருத்தாசலம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் குடிநீா் குழாயை மாற்றி சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் காலை 8.30 மணியிலிருந்து சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.