மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு
நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப்.12) பதவியேற்கிறாா்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளாா்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், தனது பதவியை கடந்த ஜூலை 21-ஆம் தேதி ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அப் பதவிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தோ்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சுதா்சன் ரெட்டியும் போட்டியிட்டனா். இதில், சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்க உள்ளதையொட்டி, அவா் வகித்துவந்த மகாராஷ்டிர மாநில ஆளுநா் பதவியிலிருந்து வியாழக்கிழமை விலகினாா். இத் தகவல் குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
குஜராத் மாநில ஆளுநா் ஆச்சாரிய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநா் பதவியைக் கூடுதலாக கவனிக்கும் வகையில் பொறுப்பு ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.