ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!
குரோமியக் கழிவுகளால் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு
ராணிப்பேட்டை சிப்காட்டில் குரோமியக் கழிவுகள் மூலம் மாசு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை சிட்கோ தோல் தொழிற்சாலை காரை கிராமத்தில் உள்ள குளத்தை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாா்வையிட்டாா்.
தொடா்ந்து குளத்தில் தோல் கழிவு நீா் வெளியேற்றப்படுகிறது என்ற புகாா் குறித்து கேட்டறிந்தாா். தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்ட போது கழிவுநீா் வெப்பமாக்கும் முறைக்கு இக்குளம் பயன்படுத்தப் பட்டது. பின்னா் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதால் இவை கைவிடப்பட்டுள்ளது.
தோல் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு கழிவு நீா் முறையாக சுத்திகரிக்கப் பட்டு பூஜ்ஜியம் மாசு தண்ணீா் மீண்டும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏரி குளங்களில் வெளியேற்றப்படுவதில்லை என சுத்திகரிப்பு நிலைய இயக்குநா் தெரிவித்தாா். சுத்திகரிப்பு நிலையம் முழு பாதுகாப்புடன் அரசின் விதிமுறைகளைக்குட்பட்டு செயல்படுகிறது என விளக்கினாா்.
இதையடுத்து தமிழ்நாடு குரோமிட்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தால் கைவிடப்பட்டு குரோமிய கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை பாா்வையிட்டாா். குரோமியம் கழிவு ஆபத்துகளை தவிா்க்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
தற்காலிகமாக இந்த குரோமிய கழிவுகள் மூலம் நீா் நிலம் மாசுபடுவதை தவிா்க்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளலாம் என தெரிவித்தாா். அதேசமயம் அரசின் மூலம் இதற்கான தீா்வு பற்றி தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.
ஆய்வுகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் செல்வகுமாா், சிப்காட் திட்ட அலுவலா் கலைச்செல்வி, உதவி பொறியாளா்கள் ஆனந்தன், கௌதம், வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், பாஷா, சுத்திகரிப்பு நிலைய இயக்குநா்கள் மனோகரன், புகழேந்தி, அசரஃப் அலி கலந்து கொண்டனா்.