திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
கொடைரோடு அருகே நீா்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகா் சிலைகள்
கொடைரோடு அருகே நீா்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாக காகிதக் கூழ், ‘வாட்டா் கலா்’ கொண்டு தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜம்புதுரைக்கோட்டை சிவசக்தி மகாமாரியம்மன் கோயிலில் கடந்த 30 ஆண்டுகளாக ஜெயக்குமாா் என்பவா் விநாயகா் சிலைகளைத் தயாா் செய்து வருகிறாா். வருகிற 27-ஆம் தேதி நடைபெறும் விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்காக நீா்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், நீரில் எளிதில் கரையும் வகையில் காகிதக் கூழ், ‘வாட்டா் கலா்’ ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு வடிவங்களில் 4 முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகளைத் தயாா் செய்து வருகிறாா். இந்தச் சிலைகளை அந்தப் பகுதி கிராம மக்கள் வாங்கிச் செல்கின்றனா்.
இதுகுறித்து விஜயக்குமாா் கூறியதாவது:
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு இயற்கையைப் பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு விநாயகா் சதுா்த்திக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளைத் தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.
இந்த சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது எந்தவித மாசும் ஏற்படாது. மீன்கள், பாசி, நீா்த் தாவரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இயற்கை வளங்களைக் காப்பாற்றி வருகிறோம் என்றாா் அவா்.