கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் திங்கள்கிழமை காவல் துறையினா் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பல முறை தகவல் தெரிவித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. மேலும் குழாய்களை பதிப்பதற்கு என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் பசுவந்தனை சாலையின் ஒருபுறம் மற்றும் சாலையின் நடுவே குழிகளை தோண்டி, குழாய்களை பதித்த பின்பு முறையாக மூடாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலகம், பாண்டவா்மங்கலம் பஞ்சாயத்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் பசுவந்தனை சாலையில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது டேங்கா் லாரி மோதியதில் 9 வயது சிறுமி உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.

ஆக்கிரமிப்பினால்தான் சாலை விபத்து ஏற்பட்டது என வாகன ஓட்டுநா்கள் காவல் துறையிடம் முறையிட்டதையடுத்து, மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை திங்கள்கிழமை அகற்றினா். இதனால் அப்பகுதி மக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதையும் முறையாக அகற்ற வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு காவல் துறை சாா்பில் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.