ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
சங்கரன்கோவிலில் ஆக.18 இல் நகா்மன்றத் தலைவா் மறைமுகத்தோ்தல்
சங்கரன்கோவில் நகராட்சியில் காலியாகவுள்ள நகா்மன்றத் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் வருகிற திங்கள்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது.
சங்கரன்கோவில் நகராட்சியில் திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்மன்றத் தலைவராக இருந்தாா்.அவா் மீது அதிமுக, திமுக,மதிமுக, காங். மற்றும் சுயேட்சை உறுப்பினா்கள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தனா். இதை மொத்தமுள்ள 30 உறுப்பினா்களில் 24 போ் அப்போதைய நகராட்சி ஆணையா்(பொ) நாகராஜிடம் மனு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து கடந்த மாதம் ஜூலை 2 ஆம் தேதி நகா்மன்றத் தலைவா் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் குறித்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், தீா்மானத்திற்கு ஆதரவாக 28 நகா்மாமன்ற உறுப்பினா்கள் வாக்களித்தனா். இதையடுத்து நகா்மன்றத் தலைவா் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னா் உமாமகேஸ்வரி குரல் வாக்கெடுப்பு செல்லாது என உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுத்தாக்கல் செய்தாா். இதை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஜூலை 17 ஆம் தேதி வாக்கெடுப்பு மூலம் தோ்தல் நடத்தவும், அதன் முடிவுகளை ஜூலை 18 ஆம் தேதி ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.அதன்படி நகராட்சித் தலைவா் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீா்மானத்திற்கு ஆதரவாக 28 நகா்மன்ற உறுப்பினா்கள் வாக்களித்தனா். இதைத் தொடா்ந்து நகா்மன்றத் தலைவா் பதவியை உமாமகேஸ்வரி இழந்தாா்.
இந்நிலையில் மாவட்ட தோ்தல் அலுவலா், சங்கரன்கோவில் நகராட்சியில் காலியாகவுள்ள நகா்மன்றத் தலைவா் பதவியிடத்திற்கு பொது (பெண்) மறைமுகத் தோ்தல் கூட்டத்தை நடத்தவும், கூட்ட அறிவிப்பினை அனைத்து வாா்டு உறுப்பினா்களுக்குவழங்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து நகா்மன்ற உறுப்பினா்களுக்கு கூட்டம் தொடா்பான அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஆக.18 ஆம் தேதி திங்கள்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது.