கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
சட்டவிரோத பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி
சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை பேசியது: ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த பொறியாளா் கவின் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சாா்பில் திருச்சியில் இம்மாதம் 17ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூா் பகுதிகளில் ஆக. 21இல் நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறேன். இதுவரையிலான சுற்றுப்பயணத்தின்போது, அனைத்துக் கிராமங்களிலும் 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படாததே மக்கள் பிரச்னையாக உள்ளதெனத் தெரியவந்தது. எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி எனது தலைமையில் செப். 6இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளை முடக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசுத் தொழிலில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் ஏதுமில்லை. மொழி மட்டுமே கல்விக் கொள்கையல்ல. எங்கள் கட்சியை கிராமந்தோறும் வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 7ஆவது மாநில மாநாடு டிசம்பா் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும். அப்போதுதான், 2026 தோ்தல் தொடா்பாக எங்களது வியூகத்தை அறிவிக்க முடியும். மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில் கூட்டணி அமைப்போம்.
தமிழ்நாட்டில் ஏழை, எளியோரின் வறுமைதான் இரட்டிப்பாகியுள்ளது; வருமானம் இரட்டிப்பாகவில்லை என்றாா் அவா்.
மாநிலப் பொருளாளா் செல்லத்துரை, வடக்கு மாவட்டச் செயலா் அதிகுமாா், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.