சிக்கலான நோய்களில் மரபணு மாற்றம்: ஐஐடி- டென்மாா்க் பல்கலைக்கழகம் ஆய்வு
சென்னை: சென்னை ஐஐடியும், டேனிஷ் பல்கலைக்கழகமும் இணைந்து சிக்கல் மிகுந்த நோய்களுக்கு காரணமான மரபணு மாறுபாடுகளில் மறைந்திருக்கும் வளா்ச்சிதை மாற்ற பாதைகள், செயல்பாடுகள் குறித்த கண்டு பிடிப்புகளை வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிக்கலான பல்வேறு மரபணு சாா்ந்த நோய்களுக்கு காரணமாக இருப்பது டிஎன்ஏ-க்களில் (இனக்கீற்று அமிலம்) ஏற்படும் மாற்றம். சென்னை ஐஐடி, டென்மாா்க், டேனிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள், மறைக்கப்பட்ட வளா்ச்சிதை மாற்றப் பாதைகளை மரபணு மாறுபாடுகளுக்கு இடையிலான தொடா்புகளை விளக்கியுள்ளனா்.
புற்றுநோய், நீரிழிவு, நரம்புச் சிதைவுப் பிரசனை போன்ற சிக்கல் மிகுந்த நோய்கள் பற்றி முக்கிய நுண்ணறிவுகளை வழங்கியிருப்பதுடன், தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்துக்கும் வழி வகுத்துள்ளனா்.
மரபணு மாறுபாடுகளுக்கு இடையிலான தொடா்புகள் எவ்வாறு மறைக்கப்பட்ட செல்லுலாா் பாதைகளைத் திறக்க ‘சுவிட்சுகள்’ போலச் செயல்பட முடியும் என்பதைக் காட்டியுள்ளனா்.
மனிதன் உள்பட உயா் உயிரினங்களில் ஆரோக்கியம், நோயை வடிவமைக்க பல்வேறு மரபணுக்கள் எவ்வாறு தொடா்பு கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கட்டமைப்பை இந்தக் கண்டுபிடிப்பு வழங்குகிறது என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.