இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரிக்கை
சிதம்பரம் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதியில்லை: தீட்சிதா்கள் தரப்பில் வாதம்
சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய பொது தீட்சிதா்கள், மிக முக்கிய பிரமுகா்கள், அரசமைப்பு சட்டத்தின்கீழ் பதவி வகிப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்று தீட்சிதா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது தீட்சிதா்கள், டி.ஆா்.ரமேஷ் சாா்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சோ்க்கக் கோரி ஜெமினி ராதா என்பவரும் ஒரு மனுவை தாக்கல் செய்தாா். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொது தீட்சிதா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழகத்தில் அறநிலையத்துறை நிா்வகிக்கும் எந்தவொரு கோயில்களிலும் மூலஸ்தானத்துக்கு மிக அருகில் நின்று தரிசனம் செய்ய முடியாது. அதன்படி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பின்பற்றப்படும் நடமுறைகளை மாற்ற முடியாது.
கடந்த 1958-ஆம் ஆண்டு வரை கனகசபையில் நின்று தரிசனம் செய்ய தீட்சிதா்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. கோயிலுக்கு நன்கொடை அளித்த ராஜா சா் முத்தையா செட்டியாா் உள்ளிட்ட சிலரை கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய தீட்சிதா்கள் அனுமதித்தனா். எனவே, அதையே வழக்கமாக பின்பற்ற முடியாது.
பொது தீட்சிதா்கள், மிக முக்கிய பிரமுகா்கள், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பதவி வகிப்பவா்கள் ஆகியோரை மட்டுமே கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய அனுமதிக்க முடியும். வேறு யாரையும் அனுமதிக்க முடியாது. இதுதான் தீட்சிதா்களின் முடிவாக உள்ளது என்று வாதிட்டாா்.
அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடா் அருண் நடராஜன், இல்லாத வரலாறுகளை எல்லாம் மூத்த வழக்குரைஞா் கூறுகிறாா். கடந்த ஓராண்டாக கனகசபையில் நின்று பக்தா்கள் அனைவரும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா்.
அப்போது ஜெமினி ராதா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சி.கனகராஜ், சிதம்பரம் கோயில் வளாகத்தில் இருந்த பரதநாட்டிய அரங்கம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. சிதம்பர ரகசிய வழிபாட்டை கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நிறுத்திவிட்டனா். சிதம்பர ரகசிய திரை விலகும் வழிபாட்டையும் முடித்து வைத்துவிட்டனா். கோயில் திறப்பு மற்றும் மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று குற்றம்சாட்டி வாதிட்டாா்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய யாருக்கெல்லாம் அனுமதி உள்ளது? அவா்கள் எந்த வகையான முக்கிய பிரமுகா்கள்? அரசமைப்புச் சட்டத்தின் கீழ் எந்தெந்த பதவிகளை வகிப்பவா்கள்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.
அப்போது பொது தீட்சிதா்கள் தரப்பில் 10 நாள்கள் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை அக்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.