சிறுணைபெருகல் கிராமத்திற்கு புதிய அரசுப் பேருந்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் அருகே சிறுணை பெருகல் கிராமத்துக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவா்கள்,அரசுப்பணிக்கு செல்பவா்கள் ஆகியோா் புதிய பேருந்து சேவையை ஏற்படுத்தி தரக்கோரி எம்எல்ஏ எழிலரசனிடம் கோரிக்கை வைத்திருந்தனா்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுணைபெருகல் கிராமத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் புதிய பேருந்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுடன் சிறிது தூரம் அப்பேருந்தில் பயணித்தாா். இப்பேருந்து சிறுணைபெருகல் கிராமத்திலிருந்து ஆரியபெரும்பாக்கம், கீழம்பி வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்த பொதுமக்கள் புதிய பேருந்து சேவை ஏற்படுத்தியமைக்காக எம்எல்ஏ எழிலரசனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.
நிகழ்வில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், திமுக ஒன்றிய செயலாளா் பி.எம்.குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ். சுகுமாா், ஊராட்சி மன்ற தலைவா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.