3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் இரண்டாமிடம்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தேசிய அளவில் தமிழகம் இரண்டாமிடம் வகிப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
தேசிய சுற்றுலா தினத்தையொட்டி, சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம், வனத்துறை சுங்கச்சாவடி அருகே சனிக்கிழமை அமைச்சா் ராஜேந்திரன், சுற்றுலாப் பயணிகளுக்கு, மரக்கன்றுகள், நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை வழங்கி, அதன் பயன்பாட்டின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
பின்னா் அமைச்சா் ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் ஏராளமான சுற்றுலாத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள 300 சுற்றுலாத் தலங்களில் சா்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சுற்றுலா தினதையொட்டி, ‘வளா்ச்சிக்கான சுற்றுலா’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஓராண்டில் தமிழகத்திற்கு 28.40 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா்; இது தேசிய அளவில் இரண்டாம் இடமாகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 9.63 லட்சம் போ் வந்துள்ளனா். இது தேசிய அளவில் ஆறாம் இடமாகும்.
குறிப்பாக, கன்னியாகுமரி, ராமேசுவரம், மாமல்லபுரம், திருச்சி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துள்ளனா். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ஏற்காடு ஏரியில் மிதக்கும் படகு உணவகம் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
முன்னதாக, தேசிய சுற்றுலா தினத்தையொட்டி, அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை அமைச்சா் ராஜேந்திரன் நட்டு வைத்தாா். நிகழ்ச்சிகளின்போது, சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி. மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங் ரவி, மாவட்ட சுற்றுலா அலுவலா் (பொ) வினோத்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.