செய்யூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்கம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்
மதுராந்தகம்: செய்யூா் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசின் சாா்பில் கல்லூரிகள் இல்லாமல் இருந்து வந்தது. இப்பகுதி மாணவா்கள் செங்கல்பட்டு, சென்னைக்கு சென்று படிக்கும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் தொகுதி எம்எல்ஏ மு.பாபு கோரிக்கையினை ஏற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என அறிவித்தாா்.
அதன்படி, காணொலி மூலம் புதிய கல்லூரியை திறந்து வைத்தாா். செய்யூரில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ மு.பாபு முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா், எம்பி. க.செல்வம், கோட்டாட்சியா் ரம்யா, மண்டல கல்லூரி இயக்குநா் மலா், வட்டாட்சியா் சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி, ஒன்றியக்குழு தலைவா் சாந்தி ராமச்சந்திரன், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். முதல்வா் மாதவன் நன்றி கூறினாா்.