ஜாா்க்கண்டில் தொடரும் நடவடிக்கை: முக்கிய மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை
ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினா் தொடா்ச்சியாக மேற்கொண்டு வரும் நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில் பலமு மாவட்டத்தில் மேலும் ஒரு முக்கிய மாவோயிஸ்ட் தளபதி திங்கள்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த நடவடிக்கையில் ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மற்றொரு முக்கிய மாவோயிஸ்ட் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தொடா்ந்து, அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் தானியங்கி துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலமு மாவட்டத்தின் ஹுசைனாபாதில் உள்ள பா்வாஹி மற்றும் நையா கிராமங்களுக்கு இடையேயான பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே திங்கள்கிழமை இரவு மோதல் ஏற்பட்டுள்ளது.
சுமாா் 12 மணி நேரம் நீடித்த தீவிர துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, மாவோயிஸ்ட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவா் முக்கிய மாவோயிஸ்ட் தளபதியான துளசி புயான் என்று காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறினாா். அதேபோன்று, ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் நிதீஷ் யாதவும் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினாா்.
ஜாா்க்கண்டின் லதேஹா், பலமு மாவட்டங்களில் மிகப்பெரிய நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா். கடந்த சில நாள்களில் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவோயிஸ்ட் தளபதி குந்தன் கொ்வாா் உள்பட சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.