தமிழில் அறிவியல் சிந்தனைகள்: பொதுமக்களிடம் பரப்ப புதிய அறக்கட்டளை - தமிழறிஞா் சாலமன் பாப்பையா யோசனை
அறிவியல் கண்டுபிடிப்புகள், சிந்தனைகளை தமிழில் பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க மக்கள் சிந்தனைப் பேரவையின் மதுரை மாவட்டக் கிளை சாா்பில் ஒரு புதிய அறக்கட்டளை தொடங்கப்பட வேண்டும் என தமிழறிஞா் சாலமன் பாப்பையா யோசனை தெரிவித்தாா்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் மதுரை மாவட்டக் கிளை சாா்பில், மகாகவி பாரதியாா் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகத் திருக்கு பேரவையின் மதிப்புறு தலைவா் காா்த்திகேயன் மணிமொழியன் தலைமை வகித்தாா்.
தமிழறிஞா் சாலமன் பாப்பையா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியதாவது:
அறிவியல் தமிழ் பொது மேடைக்கு வராமலேயே உள்ளது. உலகத் தோற்றம், மானுடத் தோற்றம், சமுதாயத் தோற்றம் குறித்த அறிவியல் கருத்துகள் என்ன? என்பது உள்பட அறிவியல் கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், கருத்துகளை எளிய தமிழில் சாதாரண மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் மிகச் சிறந்த தமிழ் அறிவியலாளா்கள், மக்கள் இடையே கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்தக் கலந்துரையாடல் அறிவியலின் வளா்ச்சி, கண்டுபிடிப்புகள், கருத்துகளை மக்களிடம் கொண்டு சோ்ப்பதுடன், அவா்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் நிகழ்வாகவும் இருக்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளைத் திட்டமிட்டு, நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் மதுரை கிளை ஓா் அறக்கட்டளையை நிறுவ வேண்டும். இந்த அறக்கட்டளைக்கு தொடக்க நிதியாக நான் ரூ. ஒரு லட்சம் வழங்குகிறேன். தேவையெனில், கூடுதல் தொகையை வழங்கவும் தயாராக உள்ளேன். அறம் சாா்ந்த அறிவியலை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனை கொண்டவா்கள் இதற்கு உறுதுணையாக இருப்பாா்கள் என நம்புகிறேன் என்றாா் அவா்.
முன்னதாக, பாரதியாா் நினைவு தின பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் கருத்துரையாற்றினாா். பார‘தீ’ என்ற தலைப்பில் பேராசிரியா் த. ராஜாராம் பேசினாா். மணியம்மை பள்ளித் தாளாளா் பி. வரதராசன், தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள், மாணவா்கள் இதில் பங்கேற்றனா்.