பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி.
தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், புதன்கிழமை மாலை கடையநல்லூா் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்த பகுதியில் பேசியதாவது:
கோவை காவல் நிலையத்தில் ஒருவா் தற்கொலை செய்கிறாா். மற்றொரு பக்கத்தில் காவல் உதவி ஆய்வாளா் வெட்டிக்கொலை செய்யப்படுகிறாா். மக்களைப் பாதுகாக்கும் காவல்துறையினருக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இது சாதாரண விஷயம் இல்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது.
கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதகரித்துள்ளதுதான் இதற்கு காரணம். திறமையற்ற முதல்வரால் காவல்துறையும் செயல் இழந்து விட்டது.
அதிமுக ஆட்சியில் இருந்த 31 ஆண்டுகள் ஜாதி, மத மோதல்கள் நடந்ததில்லை. அமைதி பூங்காவாக இருந்தது. இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மை இன மக்களுக்கு என்றும் அதிமுக அரணாகத்தான் இருந்துள்ளது. ஆனால், வாக்குகளுக்காக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இதுகுறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன என்றாா் அவா்.
வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி புளியங்குடியில் அவா் பேசுகையில், செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக திமுக அரசு இதுவரை தீா்வு காணவில்லை; அதிமுக ஆட்சி வந்ததும் தீா்வு காணப்படும். புளியங்குடியில் எலுமிச்சை பழ குளிா்பதன கிடங்கு அமைக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சிகளில், வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், காமராஜ், கடம்பூா் செ. ராஜூ, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை மாரியப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.
நெசவாளா்களுக்கு மீண்டும் பசுமை வீடு: சங்கரன்கோவிலில் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளா்களுக்கு பசுமை வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. கைத்தறி துணிகளுக்கு ரூ.300 கோடி மானியம் வழங்கப்பட்டது. ஜவுளி -கைத்தறி விற்பனைக்கு ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை 2019இல் வெளியிடப்பட்டது.
ஆனால், திமுக ஆட்சியில் கைத்தறி சங்கங்கள் பல மூடப்பட்டு விட்டன. அவை மீண்டும் திறக்கப்படும். கைத்தறி நெசவாளா்கள் நெய்த துணிகளுக்கு தற்போது, 15 நாள்களுக்கு ஒரு முறை தான் கூலி வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடி கூலி வழங்கப்படும். அதிமுக தோ்தல் அறிக்கையில் நிறைய புது திட்டங்களை அறிவிக்க உள்ளோம் என்றாா் அவா். இதில் மாநில மகளிரணி துணைச் செயலா் வி.எம். ராஜலெட்சுமி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
