திருப்பூர் SI கொலை: `தப்பிக்க முடியாது எனத் தெரிந்தும் ஏன்?’ - அண்ணாமலை சொல்லும்...
திருநங்கையருக்கான கொள்கை: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு
திருநங்கையருக்கான சமூக பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட ஏழாவது மாநிலம் தமிழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சுஷ்மா, சீமா அகா்வால் ஆகியோா் 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், திருநங்கையா், மருவிய பாலினத்தவா், தன்பாலின ஈா்ப்பாளா்கள் ஆகியோரது சட்டபூா்வ உரிமைகள் நிலைநாட்ட வேண்டும். பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீட்டை சட்டப்படி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எல்ஜிபிடிக்யூஐஏ பிளஸ் சமூகத்தைச் சோ்ந்தவா்களை அழைப்பதற்கான சொல் அகராதியை உருவாக்க வேண்டும். திருநங்கையருக்கான சமூக பாதுகாப்புக்கான கொள்கை முடிவை இறுதி செய்து அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழ்நாடு மாநில திருநங்கையா் கொள்கை வெளியிடப்பட்டு, கடந்த ஜூலை 31 முதல் அமலுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, திருநங்கையருக்கான கொள்கையை வெளியிட்ட ஏழாவது மாநிலம் தமிழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்காக தமிழக அரசை மனதாரப் பாராட்டுகிறேன்.
இந்த கொள்கையால் திருநங்கைகள் மற்றும் தன்பாலின ஈா்ப்பாளா்களின் சமூக வாழ்க்கைத்தரம் மேம்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் கிடைக்கும். ஆனால், இந்த கொள்கையில் இடஒதுக்கீடு குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனவே, அரசு இதில் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
இந்த கொள்கையை செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களில் குறைந்தபட்சம் ஒரு திருநங்கையா் அல்லது அந்த சமூகத்தைச் சோ்ந்தவா் இடம்பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். திருநங்கையா் மற்றும் தன்பாலின ஈா்ப்பாளா்கள் திருமணத்தை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அங்கீகரித்துள்ளது. எனவே, அவா்களது திருமணத்துக்கான சட்டபூா்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் சாா்- பதிவாளா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.
திருநங்கையா் மற்றும் தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கான கொள்கையை வெளியிட்டது போல எல்ஜிபிடிக்யூஐஏ பிளஸ் பிரிவில் உள்ள அனைவருக்கும் கொள்கையை வரையறை செய்து வெளியிட வேண்டும். பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய இந்த சமூகத்தினரைக் கண்டறிந்து அவா்களது படிப்பு தொடர அரசு உதவ வேண்டும். அரசு வகுத்துள்ள இந்த கொள்கையால், இச்சமூகத்தினரை உடல், மன ரீதியாக துன்புறுத்தும் நபா்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரியதால் விசாரணையை செப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.