திரௌபதி அம்மன் கோயிலில் பூணூல் மாற்றி வழிபாடு!
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பூணூல் மாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.
ஆவணி அவிட்டம் இந்தியாவில் பிராமணர்களால் மிக முக்கியமான வேத சடங்கு நாளாக கருதப்படுகிறது. இதை உபகர்மா என்றும் அழைக்கிறார்கள். இந்த நாளில் பூணூல் மாற்றிக் கொள்வது மிக முக்கியமான சடங்காக கருதப்படுகிறது. அதோடு வேதங்களை கற்பித்தலை துவங்கும் நாளாகவும், ஆன்மிக புதுப்பித்தலுக்கான நாளாகவும் ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி அவிட்டம், ஆகஸ்ட் 09ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இந்த ஆண்டு ஆடி பெளர்ணமி மற்றும் ஹயக்ரீவர் ஜெயந்திஉடன் இணைந்த நாளில் ஆவணி அவிட்டம் அமைந்துள்ளது.
ஆவணி அவிட்டம் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் முக்கிய வழிபாட்டு நாளாகும். இந்த நிலையில் கும்பகோணம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விரதமிருந்து விஸ்வகர்மா சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றிக் கொண்டனர்.