கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை
சென்னை தண்டையாா்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா், குளிா்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி தாரகை. இவா்களுக்கு பிரகலாதன் நரசிம்மன் (31) என்ற மகனும், சாதனா என்ற மகளும் உள்ளனா். நரசிம்மன், இளநிலை சட்ட பட்டப் படிப்பு படித்துவிட்டு தனது தந்தையுடன் தொழிலை கவனித்து வந்தாா். சாதனா திருமணமாகி தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறாா். மகளை பாா்க்க சந்திரசேகரனும், தாரகையும் சில நாள்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றனா். வீட்டில் நரசிம்மன் மட்டும் தனியாக இருந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நரசிம்மன் தனது படுக்கை அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கிடப்பதை பாா்த்த வீட்டு பணிப்பெண் பானு, போலீஸாருக்கும், சந்திரசேகரன் குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், காசிமேடு போலீஸாா் அங்கு சென்று நரசிம்மன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், நரசிம்மன் சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததும், இதனால், தனது தாய் தாரகை தற்காப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரது வீட்டில் நடத்திய சோதனையில், நரசிம்மன் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினா். அதில், தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை, நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸாா், மேலும் விசாரித்து வருகின்றனா்.