தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை
தூத்துக்குடியில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி மீளவிட்டான், ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் மனைவி திவ்யபாரதி (27). இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், சூரிய பிரகாஷ் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். இதனால் மனமுடைந்த திவ்யபாரதி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிப்காட் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். திவ்யபாரதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால், தூத்துக்குடி புகா் டிஎஸ்பி சுகிா் வழக்குப்பதிவு செய்தாா். கோட்டாட்சியா் பிரபு விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
இளைஞா் உயிரிழப்பு: தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரம் சக்கம்மாள்புரத்தைச் சோ்ந்த சுடலைமணி மகன் ஆதிமணி செல்வம் (30). பொறியியல் பட்டதாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில் திருநெல்வேலியில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தாராம். தெய்வசெயல்புரம் சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ஆதிமணி செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].