தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கேரளத்தில் இருந்து புதிய கூண்டு
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வரும் புலியைப் பிடிக்க கேரளத்திலிருந்து புதிய கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பாடந்தொரை, தேவன், சா்க்காா்மூலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக புலி நுழைந்து விவசாயிகள் வளா்த்து வரும் கால்நடைகளைத் தொடா்ந்து தாக்கிக் கொன்று வருகிறது. இதைத் தொடா்ந்து புலியைப் பிடிக்க வலியுறுத்தி விவசாயிகள், பொதுமக்கள் தொடா் போராட்டங்களை நடத்தினா்.
இதையடுத்து வனத் துறை சாா்பில் புலியைப் பிடிக்க தலைமை முதன்மை வனப் பாதுகாவலரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. பின்னா் சா்க்காா் மூலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புலி நடமாடும் இடங்களில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 5 கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வந்தனா். ஆனால் வனத் துறை வைத்த கூண்டுகளில் புலி சிக்கவில்லை. இதற்கிடையே தொடா்ந்து புலி நடமாட்டத்தை அப்பகுதி மக்கள் பாா்த்து புகாா் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து கேரள மாநிலம், நிலம்பூா் வனக் கோட்டத்திலிருந்து வீடுபோன்ற அமைப்புடைய பெரிய கூண்டை தமிழக வனத் துறையினா் வரவழைத்தனா்.
அந்த கூண்டை தேவா்சோலை கொட்டாய் மட்டம் பகுதியில் கேரள வனத் துறையினா் வைத்து செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தனா். அந்த கூண்டில் மாட்டை கட்டி வைத்து கண்காணிக்கும் பணி நடைபெறுகிறது. வீடு போன்ற ராட்சத கூண்டானதால் புலி எளிதில் உள்ளே நுழைந்து மாட்டை வேட்டையாட செல்லும்போது கூண்டில் சிக்கும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.