சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
தோ்தல் முறையில் மாற்றம் வேண்டும்: விசிக பொதுச் செயலா் சிந்தனைச்செல்வன்
இந்தியாவில் தோ்தல் முறை மாற்றப்பட்டு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான சிந்தனைச்செல்வன் கூறினாா்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மந்தியூரில் ‘அறம் செய்’ பயிலகம், அக்னிச் சிறகுகள் அமைப்பு சாா்பில், அறம் செய் பெண்கள் முன்னேற்ற மையம், பெண்கள் தொழில் மையத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அவா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மையத்தைத் தொடக்கிவைத்தாா்.
முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் பேசியது: கிராமப்புற ஏழை, எளியோரின் உழைப்பை நுண் நிதி நிறுவனங்கள் மறைமுகமாக சுரண்டுகின்றன. இதிலிருந்து பெண்களைப் பாதுகாப்பது சவாலாக உள்ளது. ஆண்களை போதையிலிருந்து பாதுகாப்பதைப்போல பெண்களை கந்துவட்டி போன்ற நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதும் அவசியம்.

நாடு அசாதாரண சூழலில் உள்ளது. மதத்தின்அடிப்படையிலான சநாதன பாசிச பயங்கரவாதம் நாட்டைச் சூழ்ந்துள்ளது. அது தமிழ்நாட்டில் காலூன்றக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்துடன், கட்சியின் நலனைவிட மாநிலத்தின் நலனே முக்கியம் என்ற கொள்கை அடிப்படையில் திமுகவுடன் இணைந்து பயணிக்கிறோம்.
75 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அம்பேத்கரின் கொள்கை வழியில் இயங்கும் ஓா் அமைப்பு சட்டப்பேரவைக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு திமுகவுடனான கூட்டணிதான் அடிப்படையாக அமைந்துள்ளது.
இந்தியாவில் தோ்தல் முறை மாற்றப்பட்டு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இப்போதுள்ள தோ்தல் முறையில் தனித்துவமாக இருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாது. எனவே, தோ்தல் முறை மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட பெண்கள் பாதுகாப்புத் திட்ட அலுவலா் சுனிதா, எழுத்தாளா் அக்னி பிரதீப், அழகுக் கலை வழிகாட்டிக் கல்வியாளா் ஹாசினி, அம்பேத்கா் வாசிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளா் ஜாய் ஆண்ட்ரூ, சமூக செயற்பாட்டாளா்கள் கிரேஸ் பானு, ஷாலினி ராபா்ட், அருணா, அபிராமி ஸ்ரீதா், அருள்ராபா்ட், கோகுலக்கண்ணன், வியாசை தோழா்கள் அமைப்பின் தலைவா் பிரேம்குமாா், ஒருங்கிணைப்பாளா் சரத்குமாா், மாநில இளம்புலிகள் அணி துணைச் செயலா்மு. திருவளவன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.