தொடா் மழை: சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் இன்று செல்லத் தடை
மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (மே 27) செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கடந்த ஏப். 3-ஆம் தேதி முதல் நாள்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனா்.
இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (மே 25, 26) ஆகிய இரு நாள்கள் பக்தா்கள் மலையேறத் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த இரு நாள்களாக சதுரகிரிக்குச் செல்ல பக்தா்களை அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்து வரும் தொடா் மலை காரணமாக சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்ததால், செவ்வாய்க்கிழமையும் (மே 27) சதுரகிரி மலைக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.