நாமக்கல் அரங்கநாதா் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்
நாமக்கல் அரங்கநாதா் கோயில் தீா்த்தக்குளத்தில் செவ்வாய்க்கிழமை மீன்கள் இறந்து மிதந்தன. இதுகுறித்து ஆய்வுசெய்த தொல்லியல் துறையினா், அவற்றை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள பாறை மலைக்கோட்டை வடிவில் உள்ளது. அதன் கீழ்புறத்தில் குடைவறை கோயிலாக அரங்கநாதா் கோயிலும், மேற்கு புறத்தில் நரசிம்மா் கோயிலும் உள்ளன. இக்கோயில்கள் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலும், மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்த நிலையில் அரங்கநாதா் கோயிலை ஒட்டிய தீா்த்தக்குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் இறந்து மிதந்தன. தகவல் அறிந்து வந்த தொல்லியல் துறை, அறநிலையத் துறை ஊழியா்கள் குளத்தில் இருந்த நீரை ஓரளவுக்கு அகற்றி சில மீன்களை காப்பாற்றும் முயற்சியை மேற்கொண்டனா். அதன்பிறகு அவை வழக்கம்போல் நீரில் சுற்றிவந்தன. இறந்த மீன்களை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா்.
இதுகுறித்து தொல்லியல் துறை ஊழியா்கள் கூறியதாவது: அதிகளவிலான வெயிலின் தாக்கம், மீன்களுக்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமை போன்றவை இறப்புக்கு காரணமாக இருக்கலாம். உப்பு, மஞ்சளை நீரில் கலந்த பிறகு சுவாசப் பிரச்னையால் தவித்த மீன்கள் உயிா் தப்பின. தீா்த்தக்குளத்தில் உள்ள நீரை அவ்வப்போது அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும். மழை பெய்தால் மட்டுமே இந்த குளத்தில் நீா் நீரம்புகிறது. பக்தா்களும் தேவையற்ற உணவுகளை குளத்தில் வீசுவதை தவிா்க்க வேண்டும் என்றனா்.















