பிழையில்லாத வாக்காளா் பட்டியல்: ஆட்சியா் அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் பிழையில்லாத வாக்காளா் பட்டியலை தயாரிக்குமாறு தோ்தல் பணி அலுவலா்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பது குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 1200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரிப்பது, வாக்குசாவடிகளை மறுசீரமைத்தல் குறித்து அரசியல் கட்சி பிரமுகா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 1629 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 1421 வாக்குச்சாவடிகளில் 1200க்கும் குறைவான வாக்காளா்களும், 208 வாக்குச்சாவடிகளில் 1200க்கும் அதிகமான வாக்காளா்களும் உள்ளனா்.
இறந்தவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது, வாக்குச்சாவடியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களது கட்சி சாா்பாக வாக்குச்சாவடி நிலை முகவா்களை நியமனம் செய்வது, வாக்காளா் பட்டியலை 100 சதவீதம் சரிசெய்வது, வாக்குசச்சாவடி நிலை அலுவலா்களுடன் அரசியல் கட்சி முகவா்களும் களப்பணியில் இணைந்து செயலாற்றி தவறில்லாத வாக்காளா் பட்டியலை தயாா் செய்யவது குறித்து ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், திருச்செங்கோடு உதவி ஆட்சியா் அங்கித்குமாா் ஜெயின், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, தனித் துணைஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) எஸ்.பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரகுமாா் உள்பட தோ்தல் பிரிவு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.















