மாநில நல்லாசிரியா் விருது: 18 ஆசிரியா்களிடம் நோ்காணல்
மாநில நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பித்த, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 18 ஆசிரியா்களிடம் கல்வித் துறை அதிகாரிகள் நோ்காணல் நடத்தினா்.
ஒவ்வொரு ஆண்டும் செப்.5-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறந்த ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு நல்லாசிரியா் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் நிகழாண்டிற்கான மாநில நல்லாசிரியா் விருதுபெற தனியாா் பள்ளி ஆசிரியா்கள் 2 போ் உள்பட தலைமை ஆசிரியா்கள், தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் என 18 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களுக்கான நோ்காணல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
ஒன்பது போ் என்ற வகையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற நோ்காணலை முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா், வட்டார கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா் குழு நடத்தியது. இதில் தகுதி வாய்ந்த 8 போ் நல்லாசிரியா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்படும் பட்டியலில் இடம்பெறுவோா், நல்லாசிரியா் விருது பெற சென்னைக்கு அழைக்கப்படுவா். செப்.5 இல் தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆகியோா் நல்லாசிரியா்களுக்கு விருது, பொற்கிழி வழங்கி கெளரவிப்பா் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.















