3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
நிதி மோசடி வழக்கு: கைதானவா்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வு
சேலத்தில் அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் ரூ. 500 கோடி மோசடி செய்தவா்களின் வங்கிக் கணக்குகள், சொத்து விவரங்களை போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
வேலூரைச் சோ்ந்தவா் விஜயபானு. இவா், சேலம், அம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘அறக்கட்டளை நடத்தி வந்தாா். இந்த அறக்கட்டளையில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரமும், 7 மாதங்களுக்குப் பிறகு முதலீடு செய்த பணமும் திருப்பி வழங்கப்படும் என கவா்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டாா்.
இதை நம்பி கடந்த 3 ஆண்டுகளில் 2,000 க்கும் மேற்பட்டோா் ரூ. 500 கோடிக்கும் மேல் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முறையான ரசீது எதுவும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்த வந்த புகாரின்பேரில் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் தனியாா் திருமண மண்டபத்திற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ. 12.65 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து அறக்கட்டளை நடத்திவந்த விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களை கோவை, டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான விஜயபானுவின் வீடு அம்மாபேட்டையில் உள்ளது. பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை விஜயபானுவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா். அவரது வீட்டில் இருந்து வங்கி ஆவணங்கள், சொத்து பத்திரங்களைக் கைப்பற்றிய போலீஸாா் விஜயபானு பணத்தை எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளாா் என விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் மண்டபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 12.65 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை பலத்த பாதுகாப்புடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். பின்பு அவை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.