'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
நீண்டகால பிரச்னைகளுக்கு தீா்வு காண கோரிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பேரணி, போராட்டம்
திருச்சி மாநகரில் நீண்டகாலமாக தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம், சந்திப்பு ரயில் நிலைய மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருச்சி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அடிமனை மற்றும் கோயில் மனை, குத்தகை பிரச்சனையை நிரந்தரமாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து இயக்க மனுவை திருச்சி மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கும் வகையில் வியாழக்கிழமை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்துக்கு கட்சி அழைப்பு விடுத்தது.
இதன்படி, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானம் அருகில் இருந்து வியாழக்கிழமை காலை பேரணி தொடங்கியது. இதில், 500-க்கும் மேற்பட்டோா் கட்சிக் கொடிகளை ஏந்தியபடி, கோரிக்கை பதாகைகளை கைகளில் ஏந்தி ஆட்சியரகம் நோக்கி பேரணியாகச் சென்றனா். பின்னா், ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
இந்த நிகழ்வுக்கு, மாவட்ட செயலா் எஸ். சிவா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாநில செயலா் கண்ணகி, தொடங்கிவைத்து பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் ம. செல்வராஜ், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ், அகில இந்திய விவசாய சங்க மாநில பொருளாளா் அயிலை சிவசூரியன், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலத் தலைவா் இப்ராகிம், மற்றும் நிா்வாகிகள் இரா. சுரேஷ் முத்துசாமி, எம்.ஆா்.முருகன், சையது அபுதாஹிா், ராஜா, சுரேஷ், பாா்வதி, அஞ்சுகம் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, மனு கொடுப்பதற்காக ஆட்சியரகத்துக்கு சென்ற கட்சியினரை காவல்துறையினா் உள்ளே அனுமதிக்க மறுத்ததால் அனைவரும் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரக சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் வந்து மனுவை பெற்றுக் கொள்வதாக காவல்துறையினா் தெரிவித்தனா். ஆனால், ஒரு மணி நேரம் கடந்த பிறகும் மாவட்ட வருவாய் அலுவலா் வராததால் ஆத்திரமடைந்த கட்சியினா் மாவட்ட ஆட்சியரகம் உள்ளே சென்று அலுவலக வாசலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி வந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணி, ஆா்ப்பாட்டம், மறியல் காரணமாக ஆட்சியரக பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.
