எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு
பணியிடமாற்றத்தை எதிா்த்து மருத்துவா் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதை எதிா்த்து மருத்துவா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் பெருமாள் பிள்ளை தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் 11 முதல் 19-ஆம் தேதி வரை சேலம் மேட்டூரில் இருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொண்டேன்.
இந்த நிலையில், சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த என்னை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. பாதயாத்திரை மேற்கொண்டது தொடா்பாக என் மீதான துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் எனது பணியிடமாற்றம் தன்னிச்சையானது. எனவே, பணியிடமாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.