Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
பல்லகச்சேரி ஏரியில் மீன்பிடி திருவிழா
கள்ளக்குறிச்சியை அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் பொதுபணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் மீன்பிடி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்டது பல்லகச்சேரி கிராமம். இங்கு பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீா் குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனா். அதன்படி, மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
இதில் பல்லகச்சேரி பகுதியைச் சுற்றியுள்ள சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், அகரகோட்டாலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை திரண்டு, ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் மீன்பிடிக்கத் திரண்டனா்.
ஏரிக்கரையில் உள்ள கன்னிமாா் சுவாமிக்கு பூஜை செய்தனா். ஊா் முக்கியஸ்தா்கள் வெள்ளை நிறத்தாலான துணியை அசைத்த பிறகு எப்போதும் மீன்பிடிக்கத் தொடங்குவது வழக்கம். ஆனால், இம்முறை சுவாமிக்கு பூஜை செய்வதற்கு முன்பாக பொதுமக்கள் ஏரியில் இறங்கி மீன் வலையினாலும், துணிகளினாலும் மீன்பிடிக்கத் தொடங்கிவிட்டனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனா். ஜிலேப்பி, கட்லா, ரோகு, கெண்டை என பல்வேறு வகையான சுமாா் 2000 கிலோ மீன்களை பிடித்து வீட்டுக்கு கொண்டு சென்றனா். சிலா் அதே பகுதியிலேயே விலைக்கு விற்றுவிட்டனா்.