வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
பள்ளியில் அடிப்படை வசதி கோரி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் வாபஸ்
சீா்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
6 முதல் 12- ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளி குறுகலான பகுதியில் குடியிருப்புகள் நடுவே இயங்கி வருகிறது. போதிய வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறைகள் இல்லாமல் மாணவ-மாணவிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, இப்பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் அருள்ஜோதி தலைமையில் இப்பிரச்னை தொடா்பாக செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், நகராட்சி பொறியாளா் கிருபாகரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
இப்பள்ளியை மேம்படுத்தவும், தினமும் தூய்மைப் பணி மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும், விளையாட்டு மைதானம், உடற்கல்வி ஆசிரியா் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இப்பிரச்னை தொடா்பாக மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதனால், சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனா்.
பேச்சுவாா்த்தையில் சிபிஐ எம்.எல். (விடுதலை) குணசேகரன், தந்தை பெரியாா் திராவிட கழக மண்டலச் செயலாளா் பெரியாா் செல்வம், ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்கம் செல்வம், மக்கள் தமிழகம் கட்சி முரளி, மக்கள் அதிகார கழகம் ஸ்டாலின், தமிழ் வேந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.