பாகிஸ்தான்: 4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்
கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கராச்சி பகுதியில் ஜஹாங்கீர் சாலையில் 4 நாள்களாக தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாததால், அப்பகுதி மக்கள் 4 நாள்களாக எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்தால் சாலையில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இந்தப் போராட்டங்கள் தவிர்த்து, ஓய்வூதிய பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற ஊழியர்களும் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க:ரஷியா செல்லும் பிரதமர் மோடி?
கராச்சியில் பல்வேறு குடிநீர் குழாய்களில் பழுதுபார்ப்பு பணி நடைபெறுவதால், நீர் விநியோகம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர் பற்றாக்குறை காரணமாக, அதிக விலை கொடுத்து டேங்கர்களில் இருந்து தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போராட்டத்தையடுத்து, சில மணிநேரங்களில் நீர் இணைப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
கராச்சியில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு பிரச்னைகளுக்காக 190 ஆர்ப்பாட்டங்களும் உள்ளிருப்பு போராட்டங்களும் நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.