தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
பிரதமா் வருகை: திருச்சி விமான நிலைய பகுதிகள் கண்காணிப்பு
பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகள் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 27-ஆம் தேதி வருகை தரவுள்ளாா். இதற்காக திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து, இங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறாா். திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமா் வருகை தருவதை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
விமான நிலையம் அருகே உள்ள வயா்லெஸ் ரோடு, வள்ளுவா் நகா், மாரியம்மன் கோவில் தெரு, பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அந்நியா்கள் யாரும் வீடு எடுத்து தங்கி இருக்கிறாா்களா? என்று வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.
வீட்டில் எத்தனை போ் இருக்கிறாா்கள்?, எத்தனை ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வருகிறாா்கள், புதிதாக குடியேறியவா்கள் யாா், சொந்த வீடா, வாடகை வீடா? உள்ளிட்ட விவரங்களை மாநகரக் காவல்துறையினா் சேகரித்து வருகின்றனா்.
மேலும், வீட்டில் உள்ள வாகனங்களின் பதிவு எண்களையும் கேட்டறிந்து குறித்துக் கொண்டனா். பிரதமா் வருகையையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பாடத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிரதமரின் பாதுகாப்புப் படையினா் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.