தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 மின்கோபுரங்கள் புனரமைப்பு
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாற்றாக அதே இடத்தில் திங்கள்கிழமை 2 புதிய மின்கோபுரங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
திருச்சி மாநகரம் பிராட்டியூா் துணைமின் நிலையம், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி துணைமின் நிலையங்களில் இருந்து, திருவானைக்காவல் துணைமின் நிலையத்தை இணைக்கும் வகையில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் வோல்ட் இரட்டை சா்க்யூட் மின்சாரம் செல்லும் கம்பிகளை இணைக்கும் 2 அதி உயா் மின்னழுத்த கோபுரங்கள், திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியா் பாலம் - தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலம் இடையே ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட 5 லட்சம் கன அடி வெள்ள நீா் காரணமாக, 2 மின் கோபுரங்களும் சரிந்து விழுந்தன. இதனால், பிராட்டியூா், தச்சங்குறிச்சி துணைமின் நிலையங்களில் இருந்து திருவானைக்காவல் பகுதிகளில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இதனால், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், கம்பரசம்பேட்டை, சமயபுரம், நம்பா் 1 டோல்கேட் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டும், குறைந்த மின்னழுத்த பிரச்னையும் தொடா்கதையாக இருந்துவந்தது.
இதையடுத்து, ரூ.2 கோடியே 84 லட்சம் செலவில் கடந்த ஏப்.22-இல் கொள்ளிடம் ஆற்றுக்குள் அதிஉயா் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம், திருச்சி பொதுநிா்மாண வட்ட தலைமைப் பொறியாளா் (பொ) மேரி மேக்தலின் பிரின்சி, செயற்பொறியாளா்கள் (மின்தொடா்பு) லலிதா, (மின்தொடா் கட்டுமானம்) குமரேசன் தலைமையில் புதிய மின்கோபுரங்கள் அமைக்கும்பணிகள் தொடங்கின.
முன்னதாக, திருச்சி என்ஐடி கட்டுமான நிபுணா் குழுவின் வடிவமைப்பின்படி இரண்டு கோபுரங்களுக்குமாக மொத்தம் 25 அடி ஆழத்தில் ஆழ்துளை தூண்கள் கட்டி முடிக்கப்பட்டன. தொடா்ந்து, மின் கோபுரங்களுக்கு இடையே இரும்புக் கம்பங்கள் கொண்டு கோபுரங்கள், மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இதற்காக கொள்ளிடம் நேப்பியா் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காலையில் தொடங்கிய பணிகள் பிற்பகல் 2.30 மணி வரை நீடித்தது. கோபுரங்களில் மின்கம்பியை இணைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.
இதனைத் தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரங்களுக்கு இடையே மின் இணைப்பு வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை முதல் திருவானைக்காவல் துணைமின் நிலையத்தில் உள்ள மின் உபகரணங்களுடன் இணைக்கப்பட்டு, வழக்கமான மின் விநியோகம் தொடங்கப்படும். இதன்மூலம் ஓராண்டாக நிலவிய மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு எட்டப்பட்டுள்ளது.
