பிரதமா் வருகை: மீன் பிடிக்க 3 நாள்கள் தடை
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் 3 நாள்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், ரூ.550 கோடியில் அமைக்கப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளாா். அன்றைய தினம் மதுரையிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டா் தளத்துக்கு பிரதமா் வருகிறாா்.
இந்த நிலையில், மண்டபம் ஹெலிகாப்டா் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மண்டபம் முகாமில் உள்ள இலங்கைத் தமிழா்கள் அனைவரையும் போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா் .
பிரதமா் வருவதையொட்டி, மண்டபம் முதல் ராமேசுவரம் வரை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தடுப்புக் கட்டைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாம்பன் பேருந்து பாலத்தின் மையப் பகுதியில் மேடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
மன்னாா் வளைகுடா, பாக் நீரிணைப் பகுதியில் இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனா்.
பிரதமா் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (ஏப். 4, 5, 6) 3 நாள்கள் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
ராமேசுவரம் பகுதியில் இந்திய கடற்படை ஹெலிகாப்டா்கள் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.