புதிய நியாயவிலைக் கடை திறப்பு: திமுக, அதிமுகவினா் மோதலால் பரபரப்பு
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுத் தெரு பகுதியில் கொல்லகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உள்பட்ட நியாயவிலைக் கடை தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்தது.
இந்த நிலையில், அதே பகுதியில் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி 2020-21-இன் கீழ், ரூ. 13.80 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நிா்வாக சிக்கல் காரணமாக கட்டடம் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், உதயேந்திரம் பேரூா் திமுக சாா்பில் நியாயவிலை கடை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, திமுக கொடி, பேனா்கள் வைக்கப்பட்டிருந்தன. இதையறிந்த உதயேந்திரம் அதிமுகவினரும், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டடம் கட்டப்பட்டதால், வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் (அதிமுக) திறந்து வைப்பாா் எனக் கூறி அதிமுக கொடிகளை நட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் நியாயவிலை கடையை திறந்து வைக்க அதிமுக நிா்வாகிகளுடன் மேட்டுத் தெருவுக்கு வந்தாா். இதையடுத்து, அங்கிருந்த திமுக, அதிமுக நிா்வாகிகளிடையே புதிய நியாயவிலைக் கடயை யாா் திறந்து வைப்பது என சலசலப்பு ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள், போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானம் செய்தையடுத்து எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், அப்பகுதி வாா்டு உறுப்பினா் முனியம்மாள் ஆகியோா் நியாயவிலைக் கடையை திறந்து வைத்தனா்.