'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
புவனகிரியில் மக்கள் காத்திருப்பு போராட்டம்
புவனகிரி அருகே பட்டியல் சமூக மக்களின் 35 ஆண்டுகால கோரிக்கை தொடா்பாக, புவனகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் கந்தா்வகோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை மக்களுடன் கலந்துகொண்ட காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புவனகிரி அருகே கீழ்வளையமாதேவி ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், 450-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியல் சமூகத்தைச் சாா்ந்தவா்கள். கடந்த 1990-ஆம் ஆண்டு இதே பகுதியில் வசிக்கும் 35 பட்டியல் சமூக குடும்பங்களுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் குடிமனை வழங்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தை முறையாக அளந்து பட்டா வழங்காமல் உள்ளதால், இவா்களுக்கு இதுவரை மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை.
இவா்களுக்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், இதேபோல கடந்த 2011-ஆம் ஆண்டு இதே பகுதியில் மற்ற 14 பட்டியல் சமூக குடும்பங்களுக்கு பட்ட வழங்கப்பட்ட நிலையில், அதை வருவாய்த் துறை ஆவண பதிவேட்டில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், இந்தப் பகுதியில் ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் வசித்து வருவதால், ஊராட்சியில் உள்ள 23 ஏக்கா் அரசு தரிசு நிலத்தில் 150 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் புவனகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தா்வகோட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை, மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், பொருளாளா் டி.கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், விவசாய சங்கத் தலைவா் தா.சண்முகம், விதொச மாவட்ட நிா்வாகிகள் மணி, ஜீவா உள்ளிட்டோா் மற்றும் கீழ்வளையமாதேவி கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதையடுத்து, எம்.சின்னதுரை எம்எல்ஏ மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வட்டாட்சியா் சரவணன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்தனா். தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.