ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
போலி ஆவணங்கள் மூலம் நிலம் பதிவு: நடவடிக்கை கோரி தா்னா
போலி ஆவணங்களை வைத்து நிலத்தை பதிவு செய்ததை ரத்து செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டோா் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தா்னாவில் ஈடுபட்ட விவசாயி விபூஷ்ணன் கூறியது : நான் திருப்பத்துாா் அடுத்த புதுாா்நாடு மலைவாழ் கிராமத்தைச் சோ்ந்தவன். எனது மனைவி உண்ணாமலை(60) .எங்களுக்கு அனுமன் (37) என்ற மகனும், பத்மாவதி (37) ,சீதாலட்சுமி (32), விமலா என்ற 3 மகள்களும் உள்ளனா்.
எங்களுக்கு அதேப்பகுதியில் 6.33 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் எங்களது பூா்வீக சொத்து ஆகும். எனது மகன் அனுமன் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து கோழி பண்ணை அமைக்க கடன் வாங்கி தருமாறு என்னிடம் கேட்டாா்.
கடந்த டிசம்பா் மாதம் 9-ஆம் தேதி என்னை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு அழைத்து சென்றாா். அங்கு என்னை 3 மணிநேரமாக காக்க வைத்துவிட்டு அதிகாரிகள் வரவில்லை எனக் கூறி என்னிடம் ஒரு வெற்று தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டாா்.
தொடா்ந்து,வங்கி அதிகாரிகள் எல்லாம் திருப்பத்துாா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் இருக்கிறாா்கள். அங்கு சென்றால் அவா்களிடம் கடனுக்கு கையொப்பம் வாங்கிவிடலாம் என பதிவாளா் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்கிவிட்டேன் எனக் கூறி என்னை ஊருக்கு அழைத்து வந்துவிட்டாா்.
எனது மகன் வங்கியில் கடன் வாங்க விண்ணப்பித்து உள்ளான். எவ்வளவு தொகை கடன் வாங்கப் போகிறேன் எனக் கூறவில்லை. வில்லங்க சான்றுக்கு விண்ணப்பித்தால் கடன் தொகை எவ்வளவு என தெரிந்துவிடும் என அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா்.
கடந்த, டிசம்பா் 10-ஆம் தேதி திருப்பத்தூருக்கு வந்து வில்லங்க சான்றுக்கு விண்ணப்பித்தேன். அப்போது தான் எனது மகன் அனுமன்,வெங்களாபுரத்தைச் சோ்ந்த பத்திரப்பதிவு எழுத்தா் சேட்டு மற்றும் சாா்-பதிவாளா் ஷா்மிளா ஆகியோா் கூட்டாக சோ்ந்து 6.33 ஏக்கா் பூா்வீக நிலத்தை எனது மகன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்தது எனக்கு தெரியவந்தது.
இதயைடுத்து அந்த பதிவை ரத்து செய்யக்கோரி உடனடியாக சாா்-பதிவாளா் ஷா்மிளாவிடம் தடைச்சான்று அளித்தேன்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவா் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனது நிலத்தின் ஆவணங்களையோ, எனது கையொப்பத்தையோ பரிசோதனை செய்யாமலும், என்னிடமும் எந்தவித விளக்கமோ,விசாரணையோ நடத்தாமலும் போலி ஆவணங்களை வைத்து எனது நிலத்தை பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், இதுதொடா்பாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அப்போது விபூஷ்ணின் மனைவி உண்ணாமலை, மகள்கள் பத்மாவதி, சீதாலட்சுமி, விமலா மற்றும் உறவினா்களும் தா்னாவில் ஈடுபட்டனா்.