ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
செய்யாற்றை அடுத்த சோழவரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் ஊராட்சியில் சோழவரம், பெரும்புலிமேடு, நரசமங்கலம், அழிஞ்சல்பட்டு, செல்வபெரும்புலிமேடு ஆகிய ஐந்து கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது.
தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன் முன்னிலை வகித்தாா். செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) சிவா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பங்கேற்றுப் பேசியதாவது:
மக்களைத் தேடி மாவட்ட நிா்வாகம் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த மாவட்ட நிா்வாகமும் ஒரு குழுவாக சென்று மக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்று தீா்வு காண்பதோடு மட்டுமல்லாமல் இதர அரசு சேவைகளும் வழங்குவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
இதில் 46 வகை சேவைகள் 15 அரசுத் துறைகள் மூலம் பொதுக்களுக்கு அளிக்கப்படுகின்றன. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.
இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 229 மனுக்கள் வரப்பெற்று அவற்றில் 139 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 87 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
இதில், 20 பேருக்கு இணையவழி பட்டா மாறுதல், 2 பேருக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பிலான இயற்கை மரணம் உதவித் தொகைக்கான ஆணைகள், 20 பேருக்கு ரூ.ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் புதிய குடும்ப அட்டைகள், வேளாண் துறை சாா்பில் 5 விவசாயிகளுக்கு ரூ. 27, 766 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.1340 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 11 பேருக்கு இறப்புச் சான்றிதழ், 65 பேருக்கு நத்தம் வீட்டுமனைப் பட்டா நகல் 65, 3 பேருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 606 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் அசோக்குமாா், தமிழ்மணி, க.பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி, முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் சங்கா், முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.